கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அவினாசி கோவிலில் திருமணம் நடத்த தடை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை அவினாசி கோவிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அவினாசி கோவிலில் திருமணம் நடத்த தடை
Published on

அவினாசி,

அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் வருகை மிகவும் குறைந்து போனது. கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலுக்குள் வருபவர்கள் தூய்மைப்படுத்தும் திரவத்தால் கைகளை சுத்தமாக கழுவிய பிறகு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவில் ஊழியர்கள் முக கவசம், கையுறை அணிந்து கோவில் வளாகம் முழுவதும் காலை,மாலை இருமுறை சுத்தப்படுத்தி லைசால் (கிருமிநாசினி) தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், இதன் உபகோயிலான பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கோவிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணத்திற்கு பதிவு செய்திருப்பின் உறவினர்கள் மிககுறைந்த அளவே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் நலன்கருதி கோவில் வளாகம் முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

திருப்பூர் அருகே எஸ்.பெரியபாளையம் பகுதியில் சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி உள்ள இந்தகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் 3 கால பூஜை நடைபெறும் கோவிலில், ஏரளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு செல்வதை பக்தர்கள் குறைத்து கொண்டனர். இதனால் கோவில்களுக்கு பக்தர்களின் வருகை படிப்படியாக குறைந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தனது பிடியை இறுக்கி உள்ளது. இதனால் அச்சம் அடைந்துள்ள பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல், சளி, இருமலுடன் வரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com