கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: அ.தி.மு.க. அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் அ.தி.மு.க. அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: அ.தி.மு.க. அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
Published on

கோவை,

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.224 கோடியே 10 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக் கல் நாட்டு விழா கோவை உக்கடம் பெரியகுளம் அருகே நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி, திட்ட பணி களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையை புனரமைத்து மேம்படுத்துவதற்கு ரூ.62.17 கோடி, செல்வசிந்தாமணி குளத்தின் கரையை புனரமைத்து மேம்படுத்து வதற்கு ரூ.31.47 கோடி, ஆர்.எஸ்.புரம் திவான்சாபகதூர் சாலையில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ.40.78 கோடி, எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ.74.70 கோடி, சிவராம்நகர் பகுதியில் பாதாளசாக்கடை அமைக்க ரூ.14.98 கோடி என மொத்தம் ரூ.224 கோடியே 10 லட்சம் மதிப்பில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கோவை மாவட்டத்துக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், தெருவிளக்குகள் புனரமைத்தல், குளங்களின் கரையை மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் நடக்கிறது.

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் 11 நகரங்களில் தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரையை போல், கோவையில் இருக்க கூடிய குளங்களை புனரமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மல்டிலெவல் கார் பார்க்கிங், பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. கோவை மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. கோவையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் அ.தி.மு.க. அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, என்ஜினீயர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகராட்சி தனி அதிகாரி ஸ்ரவன் குமார் ஜடாவத் வரவேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com