ஊரடங்கால் முடங்கிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணி - காரைக்கால் மக்களின் தாகத்தை தீர்ப்பது எப்போது?

காரைக்கால் மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ளது.
ஊரடங்கால் முடங்கிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணி - காரைக்கால் மக்களின் தாகத்தை தீர்ப்பது எப்போது?
Published on

காரைக்கால்,

காரைக்கால் நகர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டது. காரைக்காலை அடுத்த அகலங்கண்ணு, நேரு நகர் குடிநீர் தொட்டிகளில் இருந்து தற்போது குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் பாதையில் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் நகர பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கவேண்டும், மேலும் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை சமாளிக்க புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டவேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.50 கோடி மதிப்பில் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் நகர பகுதி முழுவதும் பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 9 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அர்ப்பணிக்கப்படும் என்றார். ஆனால் தற்போது 32 மாதங்கள் ஆகியும் கட்டுமான பணிகள் நிறைவுபெறவில்லை.

கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு துரிதமாக நடைபெற்று வந்த நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி, கொரோனா ஊரடங்கால் முடங்கியது. பணிகள் பாதி யில் நிற்கிறது. இந்த குடிநீர் தொட்டி காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி மக்களின் தாகத்தை தணிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மந்தகதியில் நடைபெறும் பணியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி இரு சட்டமன்ற உறுப்பினர்களும் அரசை வலியுறுத்தி கட்டுமான பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சேதமடைந்த சாலைகளை தார்சாலை போடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com