கடலூர் பஸ் நிலையம்: உணவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத 15 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

கடலூர் பஸ்நிலையத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
கடலூர் பஸ் நிலையம்: உணவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத 15 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
Published on

கடலூர்,

கடலூர் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், நல்லதம்பி, ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், கொளஞ்சி ஆகியோர் கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், தின்பண்ட கடை, பழக்கடை, குளிர்பான கடை மற்றும் டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில ஓட்டல் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது, உணவுகளை நல்ல தரமாக சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

தொடர்ந்து டீ கடைகளில் கலப்படம் இல்லாத டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? என பரிசோதனை செய்தனர். மேலும் குளிர்பான கடை, தின்பண்ட கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான பாதாம்பால், தின்பண்டங்களையும், செயற்கை வண்ணம் கலந்த கார வகைகளையும் பறிமுதல் செய்து பொதுமக்கள் முன்னிலையில் தரையில் கொட்டி அழித்தனர்.

பழக்கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் கொட்டினர். இந்த திடீர் சோதனையில் உணவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் கடலூர் நகராட்சி வருவாய் அதிகாரி சுகந்தி தலைமையில் உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், ரவிச்சந்திரன், கட்டிட ஆய்வாளர் அருள், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர்(பொறுப்பு) நவாஷ், அரிகுமார், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேற்பார்வையாளர் பக்கிரிராஜா ஆகியோர் பஸ்நிலையத்தில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com