கடலூர் சின்னவாணியர் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சின்னவாணியர் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கடலூர் சின்னவாணியர் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இருந்து லாரன்ஸ் ரோட்டுக்கு செல்ல சின்ன வாணியர் தெருவை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக கடைக்காரர்கள் கடை முகப்பில் பொருட்களை வைத்து இடத்தை ஆக்கிரமிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கேயோ தெருவிலேயே கடைகளை கட்டியுள்ளனர்.

இதனால் சின்னவாணியர் தெரு பெயருக்கேற்ப சின்னதாகி விட்டது. அதாவது அகலம் 22 அடியில் இருந்த இந்த தெரு தற்போது 8 அடியாக குறைந்து விட்டது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. எதிரே வரும் இருசக்கர வாகனத்துக்குக்கூட வழிவிட்டு ஒதுங்க முடியாத நிலை காணப்பட்டது.

எனவே சின்னவாணியர் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முந்தைய சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்படி நகரமைப்பு அதிகாரி அருள், நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் சிவா, நகர நில அளவையர் விஜயராகவன், அன்பு ஆகியோர் சின்னவாணியர் தெருவை அளந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை குறியீடு செய்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் தண்டபாணி உத்தரவின்படி சின்னவாணியர் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 9 கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் பல கட்டிடங்களின் முகப்புகள் மற்றும் படிக்கட்டுகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இந்த பணியை சப்-கலெக்டர் சரயூ நேரில் வந்து பார்வையிட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் சின்னவாணியர் தெரு விசாலமாக காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com