ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: நாமக்கல்லில் கடைகள், ஓட்டல்கள் திறப்பு; வாகன போக்குவரத்து அதிகரிப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நாமக்கல்லில் நேற்று கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்தது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: நாமக்கல்லில் கடைகள், ஓட்டல்கள் திறப்பு; வாகன போக்குவரத்து அதிகரிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருந்தன.

இதே நிலைதான் கடந்த 41 நாட்களாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் ஹார்டுவேர்ஸ் கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட கடைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் நேற்று நாமக்கல் நகரில் இரும்பு கடைகள், சிமெண்டு கடைகள், செல்போன் கடைகள், ஆட்டோ மொபைல்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக வட்டம் போடப்பட்டு இருந்தன. இருப்பினும் பெரும்பாலான கடைகள் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தன. மாவு அரைக்கும் மில்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதர நாட்களை ஒப்பிடும்போது நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. பெரும்பாலான ஓட்டல்கள் திறந்து இருந்தன. அங்கு பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. லாரி பட்டறைகளை பொறுத்தவரையில் பெரும்பாலான பட்டறைகள் மூடியே கிடந்தன. ஒருசில பட்டறைகளில் மட்டுமே பணிகள் நடந்தன. லாரி பட்டறைகளுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் முறையான அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com