

திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கழிவுநீர், அப்பகுதியில் உள்ள கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த கால்வாய் மருத்துவ கல்லூரியில் இருந்து ஆயுதப்படை வளாகம் வழியாக மேப்பாடி என்ற இடத்தில் உள்ள வாளவாய்க்கால் ஆற்றில் கலக்கிறது. இதே ஆற்றில் ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆற்றில் தேங்கி உள்ள கழிவு நீரை குடிக்கும் கால்நடைகளும் நோயால் பாதிக்கப்படுகின்றன.
ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தண்டலை, நாங்கரை, சிங்களாஞ்சேரி, தியானபுரம், தேவர்கண்டநல்லூர், சாப்பாவூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காவிரி பிரச்சினை காரணமாக திருவாரூர் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒரு போக சாகுபடியை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர். இந்த நிலையில் கழிவு நீர் கலப்பதால் வாளவாய்க்கால் ஆற்று பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தண்டலை, நாங்கரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
மருத்துவகல்லூரி மருத்துவமனையின் கழிவு நீர் வாளவாய்க்கால் ஆற்றில் கலக்கிறது. மருத்துவ கழிவுகள் பாசன நீருடன் கலப்பதால் விளை நிலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.