ஊராட்சி பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் ஆபத்தான கிணறு மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்

பெரியாளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் மூடப்படாத கிணற்றால் மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
ஊராட்சி பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் ஆபத்தான கிணறு மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட போது குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்திலேயே சுமார் 70 அடி ஆழத்தில் கிணறு அமைத்து கல் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பள்ளி தேவைக்கும், கிராமத்தினரின் தேவைக்கும் குடிதண்ணீர் சென்றது. தற்போது அந்த ஆழ்துளை கிணறும் பழுது அடைந்துள்ளது.

ஆபத்தான கிணறு

இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கிணற்றில் தண்ணீர் இல்லை என்ற நிலையில், அதில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் அந்தப் பக்கம் அடிக்கடி சென்று வருவதால் கிணற்றை சுற்றி முள் வேலி அமைத்து அதில் துணிகளை சுற்றி வைத்திருந்தனர். ஆனால் தற்போது எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்திற்கு பிறகு பெற்றோர்கள் அச்சத்துடன் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். மாணவர்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் பழைய ஆழமான கிணறு உள்ளது. அந்த கிணற்றில பாதுகாப்பான மூடி அமைத்து மேலே மூடிவிட்டு மழை நீர் சேமிப்பு தொட்டியாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அருகில் தண்ணீர் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். அதனால் விபத்துகள் நடப்பதற்குள் அந்த கிணற்றை மூட வேண்டும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com