விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழை, அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் பதிவானது

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழை, அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் பதிவானது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் இலங்கையை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்து சென்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. நேற்று காலையிலும் இந்த மழை நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைபிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் சென்றதை காண முடிந்தது. வேலைக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.

இந்த மழை விடாமல் மதியம் 2 மணி வரை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதன்பிறகும் விட்டு, விட்டு மழை பெய்தபடி இருந்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. கடலூர் பஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், நேரு நகர், லட்சுமிநகர், பெரியசாமிநகர் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.

கடலூர் வேணுகோபாலபுரம் மெயின்ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. கடலூர் அருகே தோட்டப்பட்டில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இருப்பினும் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக நெல்லிக்குப்பம் கம்பன் நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் காராமணிக்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது தவிர பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் முதுநகர் சாலைக்கரை நாராயணசாமி தெருவில் பாதாளசாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமமடைந்தனர்.

விருத்தாசலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நூலகத்தை மழை நீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வகுப்பறைக்குள் மழை நீர் ஒழுகியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து மதியம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியும் மழைநீரால் பாதிக்கப்பட்டது. போக்குவரத்து தடையால் செம்பளாக்குறிச்சி, சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி ஆலடி ரோடு வழியாக விருத்தாசலத்துக்கு வந்து சென்றனர். இது தவிர பெரியவடவாடி, மு.பரூர், மு.பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்ட நெல், உளுந்து உள்ளிட்ட பயிர் களும் மழைநீரில் மூழ்கியது.

மழையால் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் திருவந்திபுரம் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. குறைந்தபட்சமாக மே.மாத்தூரில் 28 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 47.58 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தொழுதூர் - 68, கொத்தவாச்சேரி - 55, பரங்கிப்பேட்டை - 54, சேத்தியாத்தோப்பு - 54, வானமாதேவி - 53.60, குறிஞ்சிப்பாடி - 53, லால்பேட்டை - 52.60, சிதம்பரம் - 47.20, பண்ருட்டி - 47.20, அண்ணாமலைநகர் - 43.60, புவனகிரி - 43, குப்பநத்தம் - 42.20, காட்டுமன்னார்கோவில்- 42, விருத்தாசலம் - 39, கடலூர் - 37.40, ஸ்ரீமுஷ்ணம் - 37.20, லக்கூர் - 36, வேப்பூர் - 35, வடக்குத்து - 33, காட்டுமயிலூர் - 33, குடிதாங்கி - 32.50

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com