கர்நாடகத்தில் 30 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் : மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி சுயதொழில் புரிய கர்நாடகத்தில் 30 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.
கர்நாடகத்தில் 30 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் : மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
Published on

பெங்களூரு,

சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சமூக நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் சுயமாக சம்பாதிக்க தேவையான உதவிகளை செய்ய சம்ருத்தி என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 30 தனியார் நிறுவனங்களுடன் சமூக நலத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி, சுயதொழிலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.800 கோடி செலவிடப்படுகிறது.

இதில் தொழில் செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்முனைவோர் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் அரசு இந்த சம்ருத்தி திட்டத்தை அமல்படுத்துகிறது.

டிசம்பர் மாதம் இறுதியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 ஆயிரத்து 600 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கி சுயதொழிலுக்கு உதவி செய்யப்படும். 12 நாட்கள் முறையான பயிற்சி அளிக்கப்படும். இதை வைத்து இளைஞர்கள் தங்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டியது அவசியம். வருகிற 7-ந் தேதிக்குள் இது தொடர்பான அனைத்து பணிகளும் முடிக்கப்படும். அதன் பிறகு இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படும். இதில் தவறுகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் தான் அமல்படுத்துகிறோம். இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், இதை மேலும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதியான இளைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வணிகம் செய்வதற்கு தேவையான இடத்தை சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காட்ட வேண்டும். 2 மாதத்திற்குள் இந்த பணிகளை அவர்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com