அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை சாவு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை இறந்தது.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை சாவு
Published on

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே காக்காயனூர் என்ற இடத்தில் அந்தியூர் வனச்சரகர் ராமராஜ் மற்றும் வன ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றார்கள். அப்போது அணை வாய்க்கால் கரையோரம் ஒரு குட்டி யானை இறந்து கிடந்ததை பார்த்தார்கள். இதுகுறித்து உடனே ஈரோடு மாவட்ட வன அதிகாரி ஆனந்துக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதைத்தொடர்ந்து அவர் மற்றும் கால்நடை டாக்டர் அசோகன் அங்கு சென்று பார்த்தார்கள். அப்போது இறந்த அந்த யானையை சுற்றி தாய் யானையும், மற்ற யானைகளும் நின்று கொண்டிருந்தன. உடனே வனத்துறையினர் அந்த யானைகளை அங்கிருந்து விரட்ட முயன்றார்கள். ஆனால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினார்கள். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றன. அதன்பின்னர் கால்நடை டாக்டர் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, இறந்தது 2 மாதமே ஆன ஆண் குட்டி யானை ஆகும். இந்த யானை தனது தாய் யானை மற்றும் மற்ற யானைகளுடன் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்து உள்ளது. அப்போது பசி மயக்கத்தில் குட்டி யானை சுருண்டு விழுந்து இறந்துள்ளது என்றார். பிரேத பரிசோதனைக்கு பிறகு குட்டி யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது.

அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளில் உள்ள செயற்கை குட்டைகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் குடிக்க வனப்பகுதி அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு யானைகள் வருகின்றன. எனவே குட்டைகளில் தண்ணீர் நிரப்பி, வனவிலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தண்ணீரில் உப்பு கரைசலை வனத்துறையினர் வைக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com