

சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்களுடன், பேரூராட்சி பணியாளர்களும் இணைந்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நகர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, அங்கு உள்ள தண்ணீர் தேங்கும் பகுதிகள், சுகாதாரமற்ற இடங்கள் என்று ஆய்வு செய்து சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் சுகாதாரமற்று வீடுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். சுகாதார ஆய்வாளர் ஜோதிபாசு மற்றும் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணிகள் நடைபெற்றன.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி கூறுகையில், சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளை சுகாதாரமாக வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. இதற்காக தினந்தோறும் சுகாதார மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கொண்டு டெங்கு தடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.