கல்விக் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

திருக்கனூர் அருகே பாண்கோஸ் பள்ளியில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்விக் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்
Published on

திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமாக பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் கந்தசாமி இந்த பள்ளியில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைத்து வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக 12-ம் வகுப்புக்கு 10 ஆயிரத்து 500 ரூபாய் வரை கல்விக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று அறிவித்தார். அதன் படியே கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த பள்ளியில் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டண பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் குறைந்தபட்ச கட்டணமாக எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணம் 8 ஆயிரத்து 280 ரூபாயாகவும், அதிகபட்சமாக பிளஸ்-2 வகுப்புக்கு 10 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.24 ஆயிரமாகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கட்டணத்தை செலுத்த வற்புறுத்தப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளியின் எதிரே லிங்காரெட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் 200-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து லிங்காரெட்டிப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதனால் காலை 11 மணி அளவில் தொடங்கிய மறியல் பகல் 3 மணி ஆன பின்னரும் நீடித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com