போலீஸ் சோதனையையும் மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் சோதனையையும் மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் சோதனையையும் மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், அதற்கு தீர்வு கிடைக்காதவர்கள் சிலர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த சம்பவங்கள் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்கள் ஒவ்வொருவரையும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதுமனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவரையும் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சோதனையையும் மீறி உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியசெவலையை சேர்ந்த ஜாகிர்உசேன் என்பவர் தனது குடும்பத்தினருடன் மண்எண்ணெய் நிரப்பியிருந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

அங்குள்ள நுழைவுவாயில் முன்பு ஜாகிர்உசேன் தன் மீதும் தனது மனைவி ஆஷா (41), மகன்கள் சதாம் (25), குரூப்பாஷா (10), மருமகள் சுல்தானி (21), பேரக்குழந்தைகள் குர்ஹானா (3), மஜித் (1), உறவினர் காதர்பாஷா (47) ஆகியோர் மீதும் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் தடுத்து நிறுத்தி, மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜாகிர்உசேன் கூறுகையில், பெரியசெவலை புதுமனை காலனி பகுதியில் எங்களுக்கு சொந்தமான வீட்டில் 10 வருடமாக வசித்து வருகிறோம். அதே பகுதியை சேர்ந்த ஒருவர், எங்கள் குடும்பத்தினரை தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் எங்கள் வீட்டிற்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதியை நாங்கள் பெற முடியாத அளவுக்கு தடுத்து வருகிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com