நஞ்சநாடு கூட்டுறவு தொழிற்சாலையில், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17 விலை நிர்ணயம்

நஞ்சநாடு கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17 என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நஞ்சநாடு கூட்டுறவு தொழிற்சாலையில், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17 விலை நிர்ணயம்
Published on

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி நீடித்து வந்ததால், குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி தேயிலை வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மூலம் நீலகிரி முழுவதும் இயங்கி வரும் தேயிலை தொழிற்சாலைகளில் விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு பிரதி மாதம் 1-ந் தேதி குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. அதன்பின்னர் மாதந்தோறும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்ய தேயிலை வாரியம் அனைத்து தேயிலை தொழிற்சாலைகளுக்கும் உத்தர விட்டது.

இதனை தொடர்ந்து குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் கொள்முதல் செய்யும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி நடப்பு பிப்ரவரி மாதத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை நிர்ணய விவரம் வருமாறு(கிலோ):-

கைகாட்டி, இத்தலார், நஞ்சநாடு, கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.17, எடக்காடு, மஞ்சூர், பிக்கட்டி, மேற்குநாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.16, சாலீஸ்பரி, பந்தலூர் தொழிற்சாலைகளில் ரூ.15, பிராண்டியர், பிதிர்காடு ஆகிய தொழிற்சாலைகளில் 14 ரூபாய் 50 பைசா, எப்பநாடு தொழிற்சாலையில் ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com