

பெங்களூரு,
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு வாழ்த்துகள் கூற நேற்று முன்தினம் நள்ளிரவே பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் திரண்டு இருந்தார்கள். பின்னர் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்தநாளை குமாரசாமி கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிலையில், நேற்று காலையில் குமாரசாமி, அவரது மனைவி அனிதா குமாரசாமி ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்று வழிபட்டனர். பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது பிறந்தநாளையொட்டி ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ரத்த தானம் செய்துள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் எனக்கு, நிறைய பொறுப்புகளை கட்சியினர் கொடுத்துள்ளனர். ஏனெனில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். 113 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா எடுக்கும் முடிவே இறுதியானது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.