தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2,820 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2 ஆயிரத்து 820 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன் கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2,820 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவியர் படை மற்றும் துறைமுகப் பள்ளி மாணவ, மாணவியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், கடற்சார் பயிற்சி கழக மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன் பேசியதாவது:-

வ.உ.சி. துறைமுகம் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் வழித்தடத்தை 16.20 மீட்டராகவும் கப்பல் தள பகுதியை 15.60 மீட்டராகவும் ஆழப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கப்பல் நுழைவு வாயில் 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக விரிவுபடுத்தப்பட உள்ளது. வ.உ.சி. கப்பல் தளம் 1 முதல் 4 வரையும், மற்றும் 5, 6-வது கப்பல் தளத்தையும் பலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இது போன்று மொத்தம் ரூ.2 ஆயிரத்து 820 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் மூலம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் கொள்ளளவு மேலும் 30 மில்லியன் டன்கள் அளவுக்கு உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com