அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் தரிசனம்

அனுமன் ஜெயந்தியையொட்டி சேலம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் தரிசனம்
Published on

சேலம்,

ஆஞ்சநேயர் கோவில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று ஆஞ்சநேயர் கோவில்களில் நடைபெற்றது. சேலத்தில் அழகிரிநாதர் கோவில் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன்பிறகு மதியம் 1008 வடமாலை சாத்தியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

வெட்டிவேரால் அலங்காரம்

அம்மாபேட்டை பட்டக்கோவில் என்று அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெட்டிவேரால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாத சாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து வெள்ளி கவசம் சாத்துப்படி செய்து பூஜை நடந்தது. செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள லட்சுமி நாராயண சாமி கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு காலை 7 மணிக்கு சிறப்பு யாகமும், அதைத்தொடர்ந்து வெள்ளி கவசம் சாத்துபடி செய்து பூஜை நடத்தப்பட்டது. கோரிமேடு ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு தங்ககவசம் அணிவித்து பூஜை நடத்தப்பட்டது.

காவடி பழனியாண்டவர் ஆசிரமம்

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி, அலமேலு தாயார் மங்கை சாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பூஜை நடத்தப்பட்டது.

இதேபோல், உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலையில் 16 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், கரும்புச்சாறு, நாட்டு சர்க்கரை, வாழைப்பழம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.

சேலம் ராஜாராம் நகரில் தேவராஜ கணபதி கோவிலில் உள்ள வரபிரசாத ஆஞ்சநேயருக்கு நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி வடமாலை சாற்றுதல் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம் ஜாகீர் அம்மாபாளையம் விஜயராகவன் நகர் பகுதியில் உள்ள பக்த வரப்பிரசாத ஆஞ்சநேயர் ஆசிரமத்தில் நேற்று முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சின்னதிருப்பதி

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அமைந்துள்ள வடக்கு முக வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, அரிசிமாவு, சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து 908 வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு சாமிக்கு படைக்கப்பட்ட வடை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் அர்ச்சகர் ரவி, ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com