வடமாநிலங்களில் இருந்து வந்ததா? திண்டுக்கல்லுக்கு படையெடுத்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் - விவசாயிகள் கவலை

திண்டுக்கல்லுக்கு படையெடுத்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப்பயிர்களை நாசப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
வடமாநிலங்களில் இருந்து வந்ததா? திண்டுக்கல்லுக்கு படையெடுத்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் - விவசாயிகள் கவலை
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். மாவட்டம் முழுவதும் 2 லட்சம் எக்டேர் விவசாய நிலம் உள்ளது. அதேநேரம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இதனால் பெரும்பாலானவை மானாவாரி நிலமாக மாறிவிட்டன.

அந்த வகையில் மொத்தமுள்ள நிலங்களில் 54 சதவீதம் மானாவாரி நிலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பகுதியில் நீர்நிலைகளும் மிகவும் குறைவாக உள்ளன. எனவே மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை உள்ளது. எனினும், விவசாயிகள் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்வதற்கு தயங்குவது இல்லை.

அதன்படி சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பருவமழை நன்றாக பெய்யும் என்று விவசாயிகள் நம்பினர். எனவே மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கினர்.

இதில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், நத்தம் உள்ளிட்ட வட்டாரங்களில் சோளம், மக்காச்சோளம் ஆகியவை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. எனினும், அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன.

இது விவசாயிகளுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. விவசாயத்தில் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும், குறைந்த அளவு நஷ்டத்துடன் சமாளித்து விடலாம் என்று ஆறுதல் அடைந்தனர். எனவே படைப்புழு தாக்குதல், பூச்சி தாக்குதல் மற்றும் பயிர்களை தாக்கும் நோயில் இருந்து மக்காச்சோளம், சோள பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்தனர்.

இதற்கிடையே திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன. பச்சை நிறத்தில் இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள், குறிப்பாக சோளம் பயிரிட்டுள்ள வயல்களை குறி வைத்து வருகின்றன.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள், சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்கு படையெடுக்கின்றன. பின்னர் அவை சோள பயிர்களில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகை அனைத்தையும் முழுமையாக தின்று விடுகின்றன. ஒரு வயலில் சோள பயிர்களின் தோகையை தின்று முடித்ததும், அடுத்த வயலுக்கு கூட்டமாக படையெடுத்து செல்கின்றன.

அவ்வாறு ஒவ்வொரு வயலாக சென்று சோள பயிர்களை தாக்கும் பச்சை வெட்டுக்கிளிகளால், பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. பூத்தல், கதிர் பிடித்தல் பருவத்தில் இருக்கும் சோள பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கதிர் பிடித்த சோள பயிர்களும், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் கதிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வெட்டுக்கிளிகள் பச்சை நிறத்தில் இருப்பதால் பயிர்களில், அவை இருப்பது விவசாயிகளின் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. ஒருவழியாக கண்டுபிடித்து விரட்டினாலும் வயலின் ஒவ்வொரு பகுதியாக பறந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் அதே வயலுக்கு சென்று விடுகிறது. இதனால் வெட்டுக்கிளிகளை விரட்ட முடியவில்லை. இதன் காரணமாக பச்சை வெட்டுக்கிளிகளால் சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஏக்கர் சோள பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு படையெடுக்காது என்று விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுபற்றி முள்ளிப்பாடி ஆரோக்கியசாமிநகரை சேர்ந்த விவசாயி சந்தியாகு கூறுகையில், பொதுவாக ஓரிரு வெட்டுக்கிளிகள் பயிர்களை தின்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவது இதுவே முதல்முறை ஆகும். அவை பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வெட்டுக்கிளிகளால் சோளம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெட்டுக்கிளிகளை அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com