அ.தி.மு.க. அரசை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அ.தி.மு.க. அரசை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியின்போது கூறினார்.
அ.தி.மு.க. அரசை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
Published on

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 தெருக்களில் ரூ.3 கோடி செலவில் அலங்கார கற்கள் சாலைகள்,பேரையூர் பேரூராட்சியில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பை-பாஸ் சாலை ரூ.2 கோடியிலும், ரூ. 50 லட்சம் செலவில் தெருக்களில் அலங்காரகற்கள் சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார்.

கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ. சரவணன், உதவி செயற்பொறியாளர் சதீஷ் குமார், ஊராட்சி உதவி இயக்குனர் லட்சுமி, ஆணையாளர் கீதா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் முருகேசன், சின்னசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் டாக்டர் பாவடியான் உள்பட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு அன்று இருந்த காங்கிரஸ் அரசும்,மாநில தி.மு.க. அரசும் காரணமாக இருந்துள்ளன.இதை மக்களிடம் எடுத்து சென்று தமிழ் இனத்திற்கு துரோகம் புரிந்தவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டு அதில் தோற்று போய் தன் சட் டையை தானே கிழித்துக்கொண்டார். இன்றைக்கு பித்துபிடித்தவர் போல நடந்து வருகிறார். ஆதாரங்களோடு பேசுகிறேன் என்று சொல்லி தரம் தாழ்ந்து பேசுகிறார்.

பிரதமர் மோடியின் அரசையும், அ.தி.மு.க. அரசையும் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. கருணாஸ் அதிர்ஷ்டத்தில் வந்தவர்,பதவியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் நிலை தடுமாறி வருகிறார். திருப்பரங்குன்றம்,திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பிரகாசமாக உள்ளது.கமல்ஹாசன் வேடத்திற்கு ஏற்ப வசனம் பேசுகிற நிலையில் அவர் களத்தை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளார். களத் திற்கு வரட்டும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com