‘காணாமல் போன மகளை மீட்டுத்தரவேண்டும்’ பெற்றோர் மனு

காணாமல் போன எங்கள் மகளை மீட்டுத்தரவேண்டும் என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.
‘காணாமல் போன மகளை மீட்டுத்தரவேண்டும்’ பெற்றோர் மனு
Published on

திருப்பூர்,

அவினாசி வேலாயுதம்பாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் பூரணதேவி(வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த ரிமுஷேக் என்ற வாலிபருடன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி முதல் காணாமல் போனதாக தெரிகிறது.

இந்த நிலையில் பூரணதேவி இறந்து விட்டதாக வந்த தகவலை தொடர்ந்து, தனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி பூரணதேவியின் பெற்றோர் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகள் பூரணதேவி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி ரிமுஷேக் என்ற வாலிபருடன் காணாமல் போய்விட்டார். இதுகுறித்த புகாரின் படி போலீசார் விசாரித்ததில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டோம். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு சுமார் 10 மணியளவில் எங்கள் மகள் இறந்து விட்டதாக செல்போன் மூலம் ஒருவர் தகவல் கூறினார்.

இதையடுத்து எனது மகளுடன் சென்ற அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில், பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் எங்கள் மகளை தவறான நோக்கத்துடன் கடத்தி சென்று தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தியுள்ளதாக சந்தேகப்படுகிறோம். எனவே, இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் மகளின் தற்போதையை நிலை என்ன? என்பதை அறிந்துகொள்வதுடன், அவளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com