உத்திரமேரூர் அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய நில தான கல் கண்டெடுப்பு

உத்திரமேரூரில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய நில தான கல் கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர் அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய நில தான கல் கண்டெடுப்பு
Published on

நில தான கல்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து காக்கநல்லூர் செல்லும் சாலையில் ஜம்போடை அருகில் உள்ள பாரடி வயல்வெளி பகுதியில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும் நில தான கல்லை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது:-

ஏழுமலை என்பவர் கொடுத்த தகவலின் பேரில் பாரடி என்கிற பகுதியை களஆய்வு மேற்கொண்டபோது இந்த நில தான கல்லை கண்டறிந்தோம்.

2 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்ட இந்த கல்லின் மேற்பகுதியின் வலப்பக்கத்தில் சூரியனும் இடப்பக்கத்தில் சந்திரனும் மையப்பகுதியில் சிவலிங்கமும் உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

சிவன் கோவில்களுக்கு...

மன்னர்கள் சிவன் கோவில்களுக்கு தானமாக நிலங்களை வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் நிலத்தின் எல்லையை குறிப்பதற்காக 4 திசைகளிலும் சிவலிங்கம் உருவம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள். இந்த நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக வழங்குவார்கள்.

இந்த கற்களில் சூரியன் மற்றும் சந்திரன் இடம்பெற்றிருப்பது தாங்கள் கொடுத்த தானம் சூரியன் மற்றும் சந்திரன் உள்ள வரை செல்லுபடியாகும் என்பதை குறிக்கவே ஆகும். இந்த நிலங்களின் மூலம் பெறப்படும் வருவாய் கோவிலின் நிதி வருவாய்க்கான ஏற்பாடாக இருந்தது. இதன் மூலம் கோவில்களுக்கு அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கெரித்தல், அமுது படைத்தல், மற்றும் கோவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவை செய்யப்பட்டன. உத்திரமேரூரில் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அப்போது இங்கு நிலம் தானமாக அளித்திருக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

இது அந்த பகுதியில் இருந்து காணாமல் அழிந்துபோன ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கோ அல்லது தற்போது உள்ள கைலாசநாதர் கோவிலுக்கோ வழங்கப்பட்ட நில தானத்தை குறிப்பதாக கொள்ளலாம்.

கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திற்கு பறைசாற்றும் இந்த வகை அரிய வரலாற்று பொக்கிஷங்களை காத்திடுவது நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com