

கோவை,
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). இவர் திருமண மண்டபங்களில் அலங்காரம் செய்யும் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். இவரிடம் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கருப்பு என்ற கருப்பசாமி(வயது 25), வெற்றி என்ற வெற்றிச்செல்வன்(21), செல்வா என்ற செல்வழகன்(21) ஆகிய 3 பேர் வேலை செய்து வந்தனர். இதில் கருப்பசாமி சம்பளத்தை உயர்த்தி தருமாறு கார்த்திகேயனிடம் கேட்டார். ஆனால் அவர் சம்பளத்தை உயர்த்தி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி சின்னியம்பாளையத்தில் உள்ள குடோனில் இருந்து திருமண மண்டபத்துக்கு தேவையான அலங்கார பொருட்களை வேணுகோபாலுக்கு சொந்தமான ஆட்டோவில் கார்த்திகேயன் ஏற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது கருப்பசாமி, வெற்றிச்செல்வன், செல்வழகன் ஆகிய 3 பேர் வந்தனர். அங்கு கார்த்திகேயனுக்கும், கருப்பசாமிக்கும் இடையே சம்பளம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி அங்கு கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து கார்த்திகேயனை தாக்கினார்.
இதை தடுக்க வந்த ஆட்டோ டிரைவர் வேணுகோபாலையும் அவர் தாக்கினார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு கருப்பசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு இரட்டை கொலை மற்றும் ஒரு கொள்ளை சம்பவத்துக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் 3 ஆயுள் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும், குற்றம் சாட்டப்பட்ட வெற்றிச்செல்வன், செல்வழகன் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார்.