508 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு

இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
508 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு
Published on

நாகர்கோவில்,

இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் பொது இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பார்கள். பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், வழிபாடு நடத்தவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வீடுகளில் பூஜைக்கு வைக்கும் சிலைகளை அந்த வீட்டைச் சேர்ந்த நபர்கள் மட்டும் எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

508 விநாயகர் சிலைகள்

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் வழங்கப்பட்ட சிலைகள் உள்பட 1,300 சிலைகள் கரைக்கப்பட்டன. இதேபோல் இந்து மகாசபா சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் 508 சிலைகள் பூஜையில் வைக்க வழங்கப்பட்டு இருந்தது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்றும் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடியில் இந்து மகாசபா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கார்த்திகை வடலியில் உள்ள குளத்தின் கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கு சிலை கரைக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இதேபோல் மாவட்டம் முழுவதிலும் இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைத்திருந்த பக்தர்கள் குழித்துறை தாமிரபரணி ஆறு, முன்சிறை கணபதியான்கடவு, ஆற்றூர், பத்மநாபபுரம் அரண்மனை அருகில் உள்ள ஆறு, இரணியல் வள்ளியாறு, கார்த்திகை வடலி குளம், ராஜாக்கமங்கலம் பன்றிவாய்க்கால் ஓடை, இரட்டை குளத்தங்கரை, தோவாளை கால்வாய், சம்புகுளம், அனந்தன்குளம், கீழமறவன் குடியிருப்பு அனந்தன்குளம், சுசீந்திரம் பழையாறு, வெள்ளமடம் ஆறு, ஆண்டார்குளம் ஆறு, ஒழுகினசேரி பழையாறு, பார்வதிபுரம் ஆறு, ராஜாக்கமங்கலம் தென்பால் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிலை கரைப்பு நடந்தது. மொத்தம் 508 சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் இந்திய சிவசேனா சார்பில் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான சிலைகளும் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com