மாவட்டத்தில் பரவலாக மழை கயத்தாறில் 66 மில்லிமீட்டர் பதிவானது

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறில் 66 மில்லிமீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் பரவலாக மழை கயத்தாறில் 66 மில்லிமீட்டர் பதிவானது
Published on

தூத்துக்குடி,

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள 3 வீடுகளின் மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தன. நேற்று காலையில் வானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு மீண்டும் மேக மூட்டமாக காணப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரோடுகளில் தேங்கி கிடந்த மழை நீரை, கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி நடந்தது.

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் கயத்தாறு உப்பாற்று ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளம் கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் முன்பு உள்ள லட்சுமண தீர்த்தம் தடுப்பு அணையை தாண்டி மறுகால் பாய்ந்து பராக்கிரமபாண்டியகுளத்துக்கு சென்றது.

அதே போல் கயத்தாறு அருகே உள்ள சாய்படைதாங்கி குளமும் நிரம்பி, மறுகாலில் தண்ணீர் பாய்கிறது. மேலும் குளத்தில் தண்ணீர் பெருகியதால், குளம் அருகே உள்ள கயத்தாறு இந்திரா நகரில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆண்டாண்டு காலமாக குளம் நிரம்பி தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் கரை அமைக்கப்படவில்லை. இதனால் இந்நிலை ஏற்படுகிறது. எனவே கரை அமைத்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் வராமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 10

குலசேகரன்பட்டினம்-8

காயல்பட்டினம் - 8.6

விளாத்திகுளம் - 14

காடல்குடி - 8

வைப்பார் - 2

கோவில்பட்டி - 8

கயத்தாறு - 66

கடம்பூர் - 55

கழுகுமலை - 13

ஓட்டப்பிடாரம் - 16

மணியாச்சி - 46

வேடநத்தம் - 20

கீழஅரசடி - 15

எட்டயபுரம் - 5

சாத்தான்குளம் - 25.6

ஸ்ரீவைகுண்டம் - 6

தூத்துக்குடி - 33.2

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com