குடிமராமத்து பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை சுரங்கத்துறை இயக்குனரும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளருமான சரவணவேல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
குடிமராமத்து பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டம், முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை சுரங்கத்துறை இயக்குனரும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளருமான சரவணவேல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை பகுதிகளில் நடைபெற்றுவரும் ஏரி, குளங்கள் குடிமராமத்து பணிகள் மற்றும் சுகாதார துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இதில் பொன்பரப்பியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தையும், அங்குள்ள ஏரியையும் பார்வையிட்டார். அதேபோன்று செந்துறை அருகே உள்ள பாளையத்தார் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் ஏரிக்கரையில் மகிழம் மரக்கன்றுகளை நட்டார். அதேபோன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயும் அரசங்கன்றுகளை நட்டு வைத்தார். அதன் பின்னர் மழைக்காலத்திற்கு முன்பாக திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கு வந்த உதயசூரியன், செல்வகுமார், சாந்தி உள்ளிட்ட விவசாயிகள் இந்த பகுதியில் சிமெண்டு ஆலை நிர்வாகம் எங்களை விவசாயம் செய்ய விடாமல் எங்களது பாதையை ஆக்கிரமிப்பு செய்து லாரிகளை இயக்குகிறது. நீர்வரத்து வாரியில் மண்ணை கொட்டி பாதை அமைத்து லாரிகளை இயக்கி எங்களை மிரட்டுகிறார்கள்.

அதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சரவணவேல்ராஜ், அரியலூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அரியலூர் கலெக்டர் டி.ஜி.வினய் தங்களது பிரச்சினை குறித்து திங்கட்கிழமை அன்று நடைபெற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். ஆய்வின்போது ஊராட்சி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசு, சிவாஜி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com