தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு தி.மு.க. வளர்ச்சிக்கும், பாராளுமன்ற- சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து மகளிரணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க...

அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் மறைந்த கருணாநிதி பெண்களுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். கல்வி உதவி திட்டம், சொத்துரிமை சட்டம், முதியோர் உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு நிதிஉதவி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய செய்தார். தமிழகத்தில் ஒரு புதிய தொழிற்சாலை கூட வரவில்லை, டாஸ்மாக் கடைகளால் குடும்பம் சீரழிந்துபோய் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆதலால் வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். இதில் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட அமைப்பாளர்கள் புஷ்பவள்ளி, பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெரம்பலூர் வரும் வழியில் விளாமுத்தூர் பிரிவு சாலை அருகே தந்தை பெரியார் பூங்காவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன் மற்றும் தனியார் பள்ளி சிறுவர்-சிறுமிகள் கனிமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும், பெரியார், அண்ணாவின் பொன்மொழிகள் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களையும் அவர் பார்வையிட்டார். அதன்பிறகு பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு திருச்சி புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com