கன்னடம் கற்பிக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை மந்திரி எஸ்.ஆர்.சீனிவாஸ் எச்சரிக்கை

கன்னடம் கற்பிக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி எஸ்.ஆர்.சீனிவாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
கன்னடம் கற்பிக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை மந்திரி எஸ்.ஆர்.சீனிவாஸ் எச்சரிக்கை
Published on

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையில் புதிதாக 2 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அத்துடன் மந்திரி எஸ்.ஆர்.சீனிவாசிடம் இருந்த சிறிய தொழில்கள் துறை மாற்றப்பட்டு, பள்ளி கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. அந்த சிறிய தொழில்கள் துறை மந்திரி நாகேசுக்கு ஒதுக்கப்பட்டது. சங்கருக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி எஸ்.ஆர்.சீனிவாஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, ஆகிய பாடப்பிரிவுகள் உள்ள தனியார் பள்ளிகளில் கன்னடத்தை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவு ஏற்கனவே உள்ளது. அதன்படி கன்னடத்தை ஒரு பாடமாக கற்பிக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில பள்ளிகள் மாநில அரசின் அங்கீகாரம் பெற்று, மத்திய பாடப்பிரிவுகளை கற்பிப்பதும், சில தனியார் பள்ளிகளில் கன்னடத்தை ஒரு மொழியாக கற்பிப்பது இல்லை என்ற தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

நான் விரைவில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, இதுபற்றி ஆய்வு செய்ய உள்ளேன். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆங்கில வழி வகுப்புகளை தொடங்குமாறு அதிகளவில் கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த கோரிக்கைகளின்படி ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும்.

மாணவர்களின் பற்றாக் குறையால் ஒவ்வொரு தாலுகாவிலும் 20 முதல் 30 பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. கன்னடத்துடன் ஆங்கில வழி வகுப்புகளும் தொடங்கப்படுவதன் மூலம் அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம். கிராமப்புறங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்பது பள்ளி கல்வித்துறையின் பணியாகும். சில தனியார் நிறுவனங்கள், அரசு பள்ளிகளை தத்தெடுத்து சிறப்பான முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைகள், விவசாயிகளின் குழந்தைகள் தான் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்த இலாகா தான் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து முதல்-மந்திரி பள்ளி கல்வித்துறையை எனக்கு வழங்கியுள்ளார். ஆசிரியர்கள் பணி இடமாற்றத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளப்படும். 11 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க தேர்வு நடத்தப் பட்டது. இதில் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவ்வாறு எஸ்.ஆர். சீனிவாஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com