டெங்கு சிறப்பு பிரிவில் இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் வருவதில்லை

டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் வருவதில்லை என்று கூறி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெங்கு சிறப்பு பிரிவில் இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் வருவதில்லை
Published on

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நாள் தோறும் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனைக்கு கூட்டம் அதிகமாகவே வருகிறது. மேலும் காய்ச்சலுக்கு வருபவர்களை ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவாகும்.

இந்நிலையில் டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் வருவதில்லை. மேலும் குடிக்க குடிநீர் கூட கிடைப்பதில்லை என கூறி சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு வெளியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நோயாளிகள் கூறியதாவது:-

இரவு நேரங்களில் சிறப்பு சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் யாரும் சிகிச்சையளிக்க வருவதில்லை. இரவு நேரங்களில் சிகிச்சை பெற வேண்டுமென்றால் அருகில் பொது சிகிச்சை பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற்று வருமாறு கூறுகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மேலும் செவிலியர்கள் சிலர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகின்றனர். மேலும் நோயாளிகளை ஏன் அலைக்கழிக்கிறீர்கள் என கேட்டால் ஊசியை மாத்தி போட்டு டெங்குவால் இறந்து விட்டதாக கூறிவிடுவேன் என மிரட்டுகின்றனர். நோயாளிகள் பரிசோதனைக்காக ரத்தம் எடுக்க ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவதாகவும் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமை மருத்துவர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் தரக்குறைவாக பேசிய செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை துணை இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததையடுத்து நோயாளிகள் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு டெங்குவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இவ்வாறான சில செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com