துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டு யானைக்கு ‘கும்கி’கள் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை

துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டு யானைக்கு ‘கும்கி’கள் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டு யானைக்கு ‘கும்கி’கள் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை
Published on

குடகு,

குடகு மாவட்டம் குஷால் நகர் அருகே யானைக்காடு கிராமத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த காட்டு யானையை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த யானையின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அந்த யானை அங்கேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தது. இதையடுத்து அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். காட்டு யானையை துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அந்த யானைக்கு காலில் அதிகப்படியான வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த யானை மீண்டும் துடித்தது. மேலும் அந்த யானையால் எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கால்நடை மருத்துவர்கள் திணறினர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. அந்த கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை எழுந்து நிற்க வைத்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் முஜீப் கூறுகையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த யானையை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அங்கு வைத்து யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். காட்டு யானை பூரண குணமடைந்த பின்னர் வனப்பகுதிக்குள் விடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com