திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
Published on

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

ஆவணித் திருவிழா கொடியேற்றம்

பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.10 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய பட்டர் ராமசாமி என்ற பாபு பட்டர் ஆவணித் திருவிழா கொடியேற்றினார்.

அதைத் தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், திரவிய பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் காலை 6.10 மணிக்கு சோடஷ தீபாராதனை நடந்தது.

யூ டியூப்பில் நேரலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் பக்தர்களின் வசதிக்காக, ஆவணித் திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி https://youtu.be/MjiiXtXHNVI என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே பார்த்தபடி தரிசனம் செய்தனர்.

விழா தொடர்ந்து 17-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் 5-ம் திருநாள் குடவரைவாயில் தீபாராதனை, 7 மற்றும் 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளும் பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட யூ டியூப் முகவரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com