

பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பிஞ்சலார் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (வயது 35). தனியார் கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர பணியாளராகவும், செங்குன்றத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு ஷாலினி (27) என்ற மனைவியும், பூமிகா (8) என்ற மகளும், ஜெய்கிருஷ் (6) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் தனது நண்பர்களான தனம், அலி ஆகியோருடன் ஆரணி சுப்பிரமணிய நகரில் உள்ள ஆற்றுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 3 பேரும் மது குடித்து விட்டு ஆரணி ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிபாபு ஆரணி ஆற்றில் மூழ்கி விட்டார்.
இதனால் பயந்து போன தனம் மற்றும் அலி ஆகியோர் வீட்டுக்கு சென்று விட்டனர். வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆரணி சுப்பிரமணிய நகர் ஆற்றங்கரையில் ஒருவரின் உடை கிடப்பதாக தகவல் கிடைத்தது. விசாரணையில் அந்த உடைகள் ஹரிபாபுவின் உடைகள் என்பது தெரியவந்தது. அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது ஆரணி ஆற்றில் குளிக்க சென்றபோது ஹரிபாபு மூழ்கிய தகவலை கூறினர். அதன் பின்னர் கும்மிடிப்பூண்டியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஹரிபாபுவின் உடலை மீட்டனர். பின்னர் ஆரணி போலீசார் ஹரிபாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.