சேலத்தில் அதிகாலையில் துணிகரம்: நகைக்கடை அதிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம், வைரம், ரூ.6 லட்சம் கொள்ளை

சேலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் அதிகாலையில் 1½ கிலோ தங்கம், வைரம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் முகமூடி ஆசாமிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
சேலத்தில் அதிகாலையில் துணிகரம்: நகைக்கடை அதிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம், வைரம், ரூ.6 லட்சம் கொள்ளை
Published on

சேலம்,

சேலம் மாநகரில் கடைவீதி, சுவர்ணபுரி, குரங்குசாவடி ஆகிய 3 இடங்களில் ஏ.என்.எஸ். திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் ஏ.ஆர்.சாந்தகுமார், ஏ.எஸ்.ஸ்ரீநாத், ஏ.எஸ்.ஸ்ரீபாஷியம். இவர்கள் 3 பேரும் தனித்தனியாக நகைக்கடைகளை நிர்வாகம் செய்து வருகிறார்கள். சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள நகைக்கடை அருகில் இவர்களது வீடுகள் உள்ளன. அங்கு அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் நகைக்கடை அதிபர் ஸ்ரீபாஷியம் சுவர்ணபுரியில் உள்ள தனது நகைக்கடைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று அறையில் படுத்து தூங்க ஆரம்பித்தனர். அதாவது, கணவன், மனைவி ஒரு அறையிலும், குழந்தைகள் வேறு ஒரு அறையிலும் படுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று அதிகாலையில் வீட்டிற்குள் இருந்து முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் பெரிய மூட்டையுடன் வெளியே வந்துள்ளனர். பின்னர் அவர்களை பார்த்தவுடன் இரவுநேர காவலாளி தங்கவேல் அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் பெரிய கத்தியை காட்டி மிரட்டி காவலாளியை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனிடையே, நேற்று காலை எழுந்த ஸ்ரீபாஷியம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் வழியே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், லாக்கரை திறந்து 1 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ஸ்ரீபாஷியம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர்கள் செந்தில், தங்கதுரை மற்றும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதாவது, நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், லாக்கரின் சாவியை எடுத்து அதனை திறந்து, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளையும், ரூ.6 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றிருப்பதும், அதன்மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை அடையாளம் காண, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர். மேலும், மோப்பநாய் ஜூலியை அங்கு வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. வீடு முழுவதும் பல்வேறு இடங்களை சுற்றி வந்த மோப்ப நாய், வீட்டின் பின்புறம் பகுதியில் மட்டும் நீண்ட நேரம் சுற்றி சுற்றி வந்தது. இதனால் வீட்டின் பின்புறம் வழியாக கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, வீட்டை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டிற்குள் கொள்ளையர்கள் செல்வதும், அதன்பிறகு அவர்கள் வெளியே மூட்டையுடன் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. ஆனால் கொள்ளையர்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்து வந்துள்ளனர்.

இதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் நபர்களா? அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வந்த நபர்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், சந்தேகத்தின்பேரில் நகைக்கடை அதிபர் ஸ்ரீபாஷியம் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் ரூ.6 லட்சம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com