சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களிடம் போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
Published on

சனி, ஞாயிறு விற்பனைக்கு தடை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இறைச்சி பிரியர்கள் முதல் நாளான சனிக்கிழமையே மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்தனர். இதனால் சனிக்கிழமை அன்றே இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதன்காரணமாக மே 1-ந்தேதியான இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) காசிமேட்டில் மீன் விற்பனைக்கு அனுமதி மறுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து 2 நாட்கள் மீன்விற்பனை இ்ல்லாததால் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சமைக்க விரும்பும் மீன் பிரியர்கள் முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதற்காக வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேட்டில் மீன் வாங்க குவிந்தனர்.

இதனால் காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே ஏராளமான கூட்டம் குவிந்ததால் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் திருவிழா போன்று காட்சி அளித்தது.

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் காசிமேடு மீன் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனிமனித இடைவெளியை கடை பிடிக்காமல் மீன் விற்பனை செய்த வியாபாரிகளை மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

கூட்டம் அதிகம் சேராதவாறு போலீசார் அடிக்கடி ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தபடியே இருந்தனர். மேலும் முக கவசம் அணியாமல் மீன் விற்றவர்கள், மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் காசிமேடு மீன்பிடித்துறைமுக போலீசார் 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com