

சேலம்:
அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தான் தொடங்கி வைக்கிறார்கள். கடந்த 9 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, சங்ககிரி பேரூராட்சிகள் மற்றும் இடங்கணசாலை நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ஆகியவை பிரதான தொழிலாக விளங்குகிறது. ஆனால் சமீபத்தில் நூல் உள்பட அதன் மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்த தொழில் முடங்கிபோய் உள்ளது. இதனால் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் சட்டசபையில் வலியுறுத்தி பேசினேன். ஆனால் தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கவர்ச்சி வாக்குறுதிகள்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறிக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் மின்சாரமும், விசைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர்களுக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை? அவர்களது வீட்டை பற்றி தான் கவலை. ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதை பற்றி மறந்து விடுவார்கள்.
தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக மு.க.ஸ்டாலினும், 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது முற்றிலும் பொய். எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது.
நீட் தேர்வு
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் 11 மருத்துவக்கல்லூரிகள், 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக், 6 சட்டக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்தினோம். இதனால் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 9 மாதங்களில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்ட திட்டங்களை தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். புதிதாக அவர்கள் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்கிறது. 2010-ல் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மீண்டும் ஆட்சி
2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அப்படி பார்த்தால் இன்னும் 27 அமாவாசை தான் இருக்கிறது. அதன்பிறகு தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அதோடு தி.மு.க.வின் சகாப்தம முடியும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதைத்தொடர்ந்து தேவூர், அரசிராமணி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் எடப்பாடி, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது, அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் பேசினார். கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், மணி, ஜெயலலிதா பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வருதராஜ், நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஆர்.பழனிசாமி, கே.ஏ.மாதேஸ்வரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வசந்தி வருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி, தாரமங்கலம்
பின்னர் எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் அரசு ஆஸ்பத்திரியில் 102 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள், ரத்த சுத்திகரிப்பு மையம், எடப்பாடியில் கோர்ட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் எடப்பாடி பூலாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் எடப்பாடி பகுதியில் செய்து தரப்பட்டுள்ளன என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் குப்பம்மாள் மாதேஷ், கரட்டூர் மணி, ஆவின் தலைவர் ஜெயராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், நகரச் செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாரமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, தாரமங்கலம் புதிய நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. பிடித்தே ஆகவேண்டும் என்றார். இதில் அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், மணி, நகர செயலாளர் பாலசுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் சின்னுசாமி, மணிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.