இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரியில் இன்று பிரசாரம் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரியில் இன்று பிரசாரம் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு
Published on

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி தலைமையில் 13 அமைச்சர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பிரசாரம் செய்தார். அவர் பல கிராமங்களில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். வீதி, வீதியாக சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். அவர் தனது பிரசாரத்தை மாலை 4 மணிக்கு ரெட்டியார்பட்டியில் இருந்து தொடங்குகிறார். தொடர்ந்து அவர் மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி ஆகிய ஊர்களுக்கு திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏர்வாடியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய ஊர்களுக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்குநேரி தொகுதியில் வருகிற 15, 16, 18 ஆகிய தேதிகளில் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாக காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முக்கிய தலைவர்கள் வருகையால் நாங்குநேரி தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com