

செஞ்சி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செஞ்சி அருகே அரியலூர் திருக்கை கிராமத்தில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பன் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் டிப்பரில் சாமி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். அந்த சமயத்தில் சாலையின் மேல்பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் டிராக்டர் டிப்பரில் வைக்கப்பட்டிருந்த சாமி பீடத்தின் மீது உரசியது. அப்போது சாமி பீடத்தை பிடித்தபடி டிராக்டரில் வந்த அதேஊரை சேர்ந்த விவசாயி முருகன்(வயது 55), இளங்கோ(50), சங்கர்(38) ஆகிய 3 பேரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோ, சங்கர் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.