மின்னணுக் கழிவுகள்

மென்பொருள் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் வெளியேற்றப்படும் மின்னணுக் கழிவுகளின் அளவு பெருகியுள்ளது.
மின்னணுக் கழிவுகள்
Published on

ன்று வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ இல்லையோ, ஆளுக்கு ஒன்றோ இரண்டோ செல்போன் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பும் கிடைத்திருந்தாலும், மென்பொருள் நிறுவனங்களில் இருந்தும், தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் மின்னணுக் கழிவுகளின் அளவு பெருகியுள்ளது. எனவே, நம்மால் முடிந்த அளவுக்கு மின்னணுக் கழிவை வெளியேற்றாமல் இருக்கலாம். நமக்குத் தேவையில்லாத செல்போன், கம்ப்யூட்டர், அடுத்தவருக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். அதனால் நமக்குப் பயன்படாத மின்னணு பொருட்களைத் தேவைப்படுகிறவர்களுக்குத் தந்து உதவலாம்.

அப்படியில்லாதபட்சத்தில், நாம் வெளியேற்றும் மின்னணுக்கழிவு, அவற்றைச் சேகரிக்கும் சிறு வியாபாரிகளைச் சென்றடைகிறது. அங்கே அவை பிளாஸ்டிக், உலோகம் என வகைப்படுத்தப்பட்டு மீதியிருக்கும் கழிவு எரிக்கப்படும். சில வகைக் கழிவுகளை அப்படியே மண்ணில் போட்டுவிடுவார்கள். மின்னணுக் கழிவிலிருந்து வெளியேறும் காட்மியம், குரோமியம், பாதரசம், காரீயம் போன்ற நச்சுகள் மண்ணை மாசுபடுத்துவதுடன் நீரையும் மாசுபடுத்தும். மின்னணுக் கழிவை எரிப்பதால் உருவாகும் நச்சுப்புகை, புற்றுநோய், நரம்பு மண்டலம், சுவாசக் கோளாறுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கக்கூடும்.

இப்போது சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையென்றால் அரசு அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களின் உதவியை நாடலாம். இவர்கள், சரியான முறையில் மின்னணுக் கழிவைக் கையாள்வார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தொழில் நிறுவனங்களைவிட, வீடுகளில் தான் மின்னணுக் கருவிகளின் பயன்பாடு அதிகம். ஆனால் வீடுகளைவிட நிறுவனங்களில் இருந்துதான் மின்னணுக் கழிவு அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

பொதுவாக கம்ப்யூட்டர், செல்போன் சார்ந்த மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றன. அதற்கு அடுத்ததாக டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் இருக்கின்றன. இவற்றை முறைப்படி கையாளவில்லை என்றால் இந்தப் பொருட்களைத் தரம் பிரிக்கும் பணியாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு நேரலாம். மின்னணுக் கழிவை மத்திய அரசின் அனுமதி பெற்று இயங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் பெருமளவில் குறைக்கும்.

உதிரி பாகங்களைச் சேகரிக்கும் சிறு வியாபாரிகளிடம் அவற்றைக் கையாள்வதற்கான உபகரணங்கள் எதுவும் இருக்காது. உதாரணமாக பயன்படாத தொலைக்காட்சிப் பெட்டியின் கண்ணாடியை உடைக்கும்போது, உள்ளே இருக்கும் வாயு வெளியேறும். அது அங்கிருக்கும் பணியாளர்களையும், அந்தச் சுற்றுப்புறத்தையும் பாதிக்கும். ஆனால் பெரிய நிறுவனங்களில் இதற்கெனத் தனிக் கட்டுமானம் இருக்கும். இவை பணியாளர்கள் உதவியின்றி, அங்கிருக்கும் குறைந்த காற்றழுத்த அறையில் தான் உடைக்கப்படும். இதனால் சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பணியாளர்களும் பாதுகாப்புடன் இருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com