விருதுநகரில் இருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வலியுறுத்தல்

விருதுநகர் மண்டல போக்குவரத்து கழக நிர்வாகம் மறு ஆய்வு மேற்கொண்டு, விருதுநகரில் இருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
விருதுநகரில் இருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வலியுறுத்தல்
Published on

விருதுநகர்,

விருதுநகரில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர்பகுதிகளுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் டவுன் பஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் அதே நிலையில் தான் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலையில் கிராமப்பகுதிகளில் இருந்து விருதுநகருக்கு வேலை காரணமாகவும், பள்ளி செல்லும் மாணவர்களும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு பஸ்களின் எண்ணிக்கை இல்லாததால் கிராம மக்களும் குறிப்பாக மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக மதுரையில் இருந்து சாத்தூர் வழியாக கோவில்பட்டி, நெல்லை செல்லும் புறநகர் பஸ்கள் விருதுநகருக்குள் வராமல் பை-பாஸ் ரோட்டில் இயக்கப்படுவதால் விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்வோர் மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு அதிகாலையில் 5 மணிக்கு தான் பஸ் இயக்கப்படுவதோடு நாள் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள பகுதிகளுக்கு செல்வோரும் நீண்ட நேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.

இதே போன்று பேராலி, எம்.புளியங்குளம், பேய்குளம், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் அப்பகுதியில் இருந்து வருவோரும், அப்பகுதிக்கு செல்வோரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேராலி கிராமத்தில் இருந்து விருதுநகர் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து உடனடியாக ஊருக்கு திரும்ப முடியாமல் இரவு 8 மணிக்கு தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரம் நிற்க வேண்டிய நிலை இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது உள்ள நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப அதிக பஸ்கள் தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட பின்னரும் ரெயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்களை இயக்காமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com