விவசாய கடனை திரும்ப செலுத்தாத விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பினால் கடும் நடவடிக்கை - வங்கி அதிகாரிகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை

விவசாய கடனை திரும்ப செலுத்தாத விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பினால் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாய கடனை திரும்ப செலுத்தாத விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பினால் கடும் நடவடிக்கை - வங்கி அதிகாரிகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பெலகாவி, தாவணகெரே மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி ஒரு தனியார் வங்கி, விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. மேலும் சில விவசாயிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் கர்நாடக அரசு உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு நோட்டீசு அல்லது பிடிவாரண்டு பிறப்பித்தால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அந்த கடன் தொகையை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் விவசாயிகளுக்கு நோட்டீசு கொடுத்து தொந்தரவை ஏற்படுத்த வேண்டாம்.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பெலகாவி மாவட்டத்தில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன், தள்ளுபடி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய கடனை தவிர்த்து, வேறு கடனுக்கு அரசு பொறுப்பேற்காது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com