வரதமாநதி அணையில் தண்ணீர் திறப்பு எதிரொலி: பழனி வையாபுரி குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வரதமாநதி அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் எதிரொலியாக பழனி வையாபுரி குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வரதமாநதி அணையில் தண்ணீர் திறப்பு எதிரொலி: பழனி வையாபுரி குளத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பழனி,

பழனி-கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் அருகே வரதமாநதி அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 66 அடி ஆகும். பழனி, கொடைக்கானல் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அணையில் தற்போது 62.47 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 92 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாசன குளங்களில் ஒன்றான வையாபுரி குளத்துக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் திறப்பின் அளவை பொறுத்து குளம் விரைவில் நிரம்பி மறுகால் பாய தொடங்கும். குளம் நிரம்ப தொடங்கியுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த குளத்தின் மூலம் பழனி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் மற்றும் மானூர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பரப்பளவு கொண்ட நிலங்கள் பாசன வசதி பெறும்.

குளம் நிரம்புவது தங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், பராமரிப்பு இல்லாததால் அமலைச்செடிகள் வளரும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், புன்னிய குளமாக கருதப்பட்ட வையாபுரி குளம் தற்போது கழிவுநீர் கலக்கும் இடமாக மாறியுள்ளது.

எனவே இந்த குளம் நிரம்பினாலும் கழிவுநீர் கலந்தநீராகவே இருக்கிறது. இதனால் குளத்தின் புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்கும் குளத்து நீரை பயன்படுத்த முடியாது. எனவே குளத்தில் அமலைச்செடிகள் வளராமல் தடுப்பதோடு, கழிவுநீர் கலப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com