ஈரோட்டில் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை முயற்சி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஈரோட்டில் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை முயற்சி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலி (26). இவர்களுக்கு சதீஸ் (6) என்கிற மகனும், அஞ்சனி (3) என்கிற மகளும் உள்ளனர்.

சந்தோஷ் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் அவர் சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடன் தொல்லையால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது மனவேதனையுடன் காணப்பட்ட அஞ்சலி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தபிறகு தன்னுடைய மகனும், மகளும் ஆதரவின்றி தவிப்பார்களே என்று எண்ணிய அவர், அவர்களையும் கொன்றுவிடலாம் என நினைத்தார். இதைத்தொடர்ந்து குளிர்பானத்தில் அஞ்சலி விஷத்தை கலந்தார். பின்னர் விஷம் கலந்த குளிர்பானத்தை சதீசுக்கும், அஞ்சனிக்கும் அவர் குடிக்க கொடுத்தார். தாய் கொடுப்பதை பாசத்தோடு வாங்கிய 2 பேரும் ஆசையோடு குளிர்பானத்தை பருகினார்கள். பின்னர் அஞ்சலியும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் வெளியில் சென்றிருந்த சந்தோஷ் வீட்டிற்கு திரும்பினார். அப்போது விஷ பாட்டில் அருகில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அஞ்சலி, சதீஸ், அஞ்சனி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் கூறுகையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி எனது சொந்த ஊர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஈரோட்டிற்கு வந்தேன். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்காக ரூ.2 லட்சம் கொடுத்து இருந்தேன். ஆனால் சில மாதங்களில் வேலை இல்லை என்று கூறிவிட்டனர். அதன்பின்னர் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தோம். பின்னர் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்து எங்களது முடிவை மாற்றிக்கொண்டோம். இந்த நிலையில் நான் வீட்டில் இல்லாதபோது எனது மனைவி, குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார், என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com