

ஈரோடு,
சிவன்யா ஈவன்ட்ஸ் மற்றும் புரமோசன்ஸ் சார்பில் ஜூராசிக் பார்க் கண்காட்சி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், கருணாகரன் ஆகியோர் கூறும்போது, ஈரோட்டில் முதல் முறையாக ஜூராசிக் பார்க் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் நுழைவு வாயிலில் மலையின் குகைக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மலையின் உச்சியில் மனித குரங்கு உட்கார்ந்து இருந்து வரவேற்பது பொதுமக்களை கவரும் வகையில் உள்ளது. கண்காட்சியின் உள்ளே பிரமிப்பூட்டும் விலங்குகளின் வடிவமைப்பு எந்திரங்களால் வைக்கப்பட்டு உள்ளது. இதில் எந்திரங்களின் அசைவுகளுக்கு ஏற்ப இசை ஒலிபரப்பப்படுவதை சிறுவர்-சிறுமிகள் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். மேலும், பொழுதுபோக்கு அம்சமாக பல்வேறு வகையான ராட்டினங்கள் உள்ளன. வீட்டு உபயோக பொருட்களும் கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம். இந்த கண்காட்சி அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரையும், மற்ற நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும், என்றனர்.