கூடமலையில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 8 பேர் காயம்

கூடமலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினார்கள். மேலும் மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
கூடமலையில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 8 பேர் காயம்
Published on

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், காமராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, சின்னதம்பி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் 383 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 284 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, மஞ்சினி, செந்தாரப்பட்டி ஆகிய இடங்களை தொடர்ந்து 4-வது இடமாக கூடமலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து சிங்கிபுரம், கீரிப்பட்டி, உலிபுரம் ஆகிய 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அந்த 3 இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக சாமி மாடு விடப்பட்டது. இதன்பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. மொத்தம் 624 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. அவைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினார்கள். சில மாடுகள், அடக்க முயன்ற வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றன. 300 மாடுபிடி வீரர்கள் தலா 150 பேர் வீதம் 2 குழுவாக களத்தில் இறக்கி விடப்பட்டனர். மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை பார்வையிட ஏராளமான பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், குக்கர், ஏர்கூலர் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை அவர்கள் உற்சாகத்துடன் வாங்கிச்சென்றனர்.

தொடக்க விழாவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தாசில்தார் வரதராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மருதமுத்து, முருகேசன், பாலசுப்பிரமணி, பிரபு, சாவி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் முத்துலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் ஜல்லிக்கட்டையொட்டி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com