நாளை முதல் திங்கட்கிழமைதோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு முகாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வருவாய் அலுவலகங்களில் நாளை முதல் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அவித்துள்ளார்.
நாளை முதல் திங்கட்கிழமைதோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு முகாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
Published on

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு முகாம், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற இயலவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் நலன்கருதியும், கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் மக்கள் குறைதீர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைக்காக நீண்டதூரம் பயணம் செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதால் தொற்று ஏற்படும் என்பதால், மக்களின் சிரமத்தை போக்க வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலேயே நாளை (திங்கட்கிழமை) முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வருவாய் ஆய்வாளர் பெறுவார். மனுக்கள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பெறப்படும். அந்த மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். முகாமில் சம்பந்தப்பட்ட உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் துறைவாரியாக பிரித்து சம்மந்தப்பட்ட துறைக்கு வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

மனுதாரர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்படாது. கட்சிகள், அமைப்புகள் வாகனங்களில் கும்பலாக வந்து மனுக்கள் அளித்தால் பெற்று கொள்ளப்படாது என வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com