

செம்பட்டி:
செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உடல் கருகினர்.
பட்டாசு தயாரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள், முருகன், ராஜபெருமாள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.
வாணவெடி, மத்தாப்பு, பூத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகள் இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. தாங்கள் தயாரித்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக, வீரக்கல் வேலக்கவுண்டன்பட்டி சாலையில் தொழிற்சாலை வளாகத்திலேயே குடோன் உள்ளது.
குடோன் அருகே உள்ள தாழ்வாரத்தில் பட்டாசு தயாரிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் வீரக்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 46) சசி என்ற திம்மிராயன் (45), கருப்பையா (46) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
பயங்கர வெடி விபத்து
அப்போது குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த இடத்திலும் தீ பரவியது. இதனையடுத்து அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்தன.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 3 தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தயாரித்து வைத்திருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்தன. தீயில் சிக்கிய 3 பேரும் உடல் கருகினர்.
இதற்கிடையே பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அங்கு உடல் கருகி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
இதற்கிடையே ஆத்தூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பட்டாசு, வெடிகள் வெடித்து சாம்பலாகி விட்டது.
இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உடல் கருகிய சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.