ஸ்ரீவைகுண்டம் அருகே வெடி விபத்து: பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டமானது.
ஸ்ரீவைகுண்டம் அருகே வெடி விபத்து: பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டம்
Published on

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் கிராமத்தில் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. வல்லநாடு மலைஅடிவாரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க தேவையான கந்தகம், பொட்டாசியம், நைட்ரேட் உள்ளிட்ட மூலப்பொருட்களை நவீன எந்திரங்கள் மூலம் ஒன்றாக கலந்து, அதனை பட்டாசில் அடைக்கும் வகையில் மாற்றுகின்றனர்.

பின்னர் அதனை பட்டாசு தயாரிப்பதற்காக பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்காக காட்டு பகுதியில் சிறிது இடைவெளியில் தனித்தனியாக 25 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மூலப்பொருட்களை கலக்கும்போது வெடி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், அதற்கு ஆட்களை பயன்படுத்தாமல் முழுவதும் எந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

நேற்று காலையில் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள எந்திரத்தில் பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை எடுத்து வைத்து விட்டு, ஊழியர்கள் வெளியே வந்து விட்டனர். பின்னர் ரிமோட் மூலம் எந்திரத்தை இயக்கினர். அப்போது சிறிதுநேரத்தில் அந்த எந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டிடம் தரைமட்டமானது. அப்போது அதன் அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த வெடி விபத்து ஏற்பட்டதில் கட்டிடத்தின் சிதறல்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்று விழுந்தன. அப்போது பத்மநாபமங்கலம், இசவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், தாசில்தார் சந்திரன், துணை தாசில்தார் சுந்தரராகவன், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் வல்லநாடு மலை அடிவாரத்தின் வடபகுதியில் புள்ளிமான் சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com