தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை அம்பலப்படுத்திய போலீஸ் அதிகாரி ரூபா பேட்டி

‘‘நான் கூறிய புகார்கள் உண்மை என நிரூபணமாகிவிட்டது, தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்’’ என்று சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது பற்றி அம்பலப்படுத்திய போலீஸ் அதிகாரி ரூபா கூறினார்.
தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை அம்பலப்படுத்திய போலீஸ் அதிகாரி ரூபா பேட்டி
Published on

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது பற்றி நடந்த வினய்குமார் குழுவின் விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து டி.ஐ.ஜி. ரூபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தபோது, பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தேன். அப்போது அங்கு குற்றவாளி சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை பார்த்தேன்.

அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து மாநில அரசுக்கு வழங்கினேன். சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து காடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது குறித்தும் புகார் தெரிவித்து இருந்தேன். அதுபற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

அந்த குழு சிறையில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் விரும்பினேன். இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அந்த அறிக்கையின் நகலை பெற நான் விண்ணப்பித்தேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த அறிக்கை தற்போது எனக்கு கிடைத்துள்ளது. அது பகிரங்கமாகியுள்ளது. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதும் அம்பலமாகியுள்ளது. நான் அனுப்பிய அறிக்கையில் என்ன கூறினேனோ, அவை வினய்குமார் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது உண்மை தான் என்று அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. நான் முன்னதாக இதுபற்றி அறிக்கையில் கூறியபோது, அதை நிராகரித்தனர். ஆனால் நான் கூறிய அனைத்து புகார்களும் தற்போது உண்மை என நிரூபணமாகியுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். அது தான் எனது விருப்பம்.

சிறையில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பது என்பது தவறானது. இது தடுக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை சட்டப்படி அனுபவிக்க வேண்டும். இவ்வாறு ரூபா கூறினார்.

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பான வினய்குமார் விசாரணை குழு அறிக்கை நகலை கேட்டு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார். அவருக்கும், இந்த விசாரணை அறிக்கையின் நகல், தகவல் ஆணையம் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com