போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
மதுரை ஐகோர்ட்டு
மதுரை ஐகோர்ட்டு
Published on

அதிருப்தி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் மருத்துவமனை நடத்தி வந்தார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2011-ஆம் ஆண்டு இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தனது மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீல் வைத்தது ரத்து செய்யுமாறு ஜெயபாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்திய ஜெயபாண்டியை போலீசார் கைது செய்யாததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை.

ஆபத்தானவர்கள்

பின்னர் இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொரோனா தொற்று காலத்தில் ஏராளமான அரசு டாக்டர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மனுதாரரை போன்ற போலி டாக்டர்கள், கொரோனா கிருமியை விட மிகவும் ஆபத்தானவர்கள். மனுதாரர் மீதான குற்ற வழக்கை கீழ் கோர்ட்டு 15 வேலை நாட்களுக்கு மேல் ஒத்திவைக்காமல், தினமும் விசாரித்து முடிக்க வேண்டும். போலி நபர்களின் அடையாளம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை.

இவரிடம் எந்த காலகட்டத்திலும் மக்கள் சிகிச்சைக்கு செல்லாமல் இருப்பதற்காக மனுதாரரின் புகைப்படத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மனுதாரரின் மருத்துவமனைக்கு சீல் வைத்ததில் தலையிட முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com