தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலி

திண்டுக்கல் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலி
Published on

குள்ளனம்பட்டி,

தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் இறப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதேபோல் தூத்துக்குடியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை இறந்தது. இந்த துயர சம்பவம் அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு ரீகன்ஸ்ரீ (6), பிரசாத் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் ராஜ சேகர் வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் திருப்பூருக்கு சென்று விட்டார்.

இதனால் தேவிகா 2 மகன்களுடன் அருகே உள்ள தனது தந்தை பால்சாமி வீட்டுக்கு சென்றார். பால்சாமி வீட்டின் முன்பு தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று காலை தேவிகா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரசாத் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான்.

சமையல் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து தேவிகா பார்த்தபோது குழந்தையை காணாது அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதறிபோன தேவிகா அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடினார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தேவிகா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com